
மற்றொரு பௌர்ணமி இரவில்
இவென் வண்டி ஓட்றாத இருந்தா நான் வரவே இல்ல போய்ட்டு வாங்கடா சாமிகாளா. அப்டியாப்பட்ட சரக்கே இந்த மாரீஸ்க்கு தேவ இல்லடா. ஒனி ய யாரு புடிச்சு இப்ப தாங்கிக்கிட்டுருக்கா, ஒதுங்கு வெண்நேய் என்று சொல்லியபடி நான் ஸேர் ஆட்டோவின் பின் இருக்கையில் சுரேஷ் அருகில் உட்கார்ந்தேன், தொடர்ந்து செந்தில் மாமா அமர்ந்தார். ராஜேஷ் ஆக்ஸிலராட்ரை முறுக்கியபடி சரி மாமா போவோமா என்று கேட்ட அடுத்த நொடி மாரிஷ் ராஜேஷ் இருக்கையை பகிர்ந்து உட்கார்ந்துக் கொண்டான். சரிசரி சரக்கு வேஸ்டாப் போகுமா இல்லயா செந்தில் மாமாவைத் தவித்து பூரா பயலும் கட்டிங்க்கு மேல குடிக்க மாட்டீக அதேன் வர்றேன் என்று மாரிஷ் சொல்லி முடிக்க ஆக்ஸிலராட்ரை இன்னும் அதிகமாக முறுக்கி கிளர்ச்சை சட்டென விட்டதும் ஆட்டோவின் முன் சக்கரம் தவ்வி தெருவில் சீறியது ஆட்டோ.
சேட்டையை காட்டிடியான் பாத்தியா, இதுக்குத்தேன் இந்த சல்லிபய ஓட்னா ஏற மாட்டேனது. மகனே அவனே ஓங்கி எத்தி அப்டியே வெளிய தள்ளிவிட்றா என்றார் செந்தில் மாமா. செத்துத் தொலடா-னு இப்ப அதத்தேன் செய்யப் போறேன் பாரு என்று ராஜேஷ் சொல்ல, அவனின் தோழில் கையைப் போட்டு, விடுங்க ஒன் நாட் ஏய்ட் இதுக்கெல்லாம் கோவப் பட்ட அப்றோம் நாடு என்னா ஆகுரது என்றான் மாரிஷ்.
ராஜேஷ் எப்பொழுதும் சட்டைக் காலரைத் தூக்கி விட்டு, மீசையை முறுக்கி விட்டு ஒரு தோரணாயாக நடப்பான். ஏதோ பத்திருபது பேரை அடித்து 108க்கு போன் போட்டு அடிபபட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு வருவது போலவே நடப்பான். அதனால் தான் அவனுக்கு அந்த பெயர் " ஒன் நாட் ஏய்ட்". தாறுமாறாக ஓடிய வண்டி டாஸ்மாக் சென்றடைந்தது. வச்சிருக்க காசப் பூராங் குடுங்க, என்கிட்ட முன்னூறு ரூவா இருக்கு என்றான் சுரேஷ். எல்லோரும் அவரவரிடமிருந்த காசைக் கொடுத்தோம். எனக்கு சில்லுநு ஒரு பியர் ஒரு க்வார்டர் ஓயின் என்றேன். மகனே அப்பாவுக்கு ஒரு வொட்காவும் ஒரு லிம்காவும் என்று மாரிஷ் கேட்க முறைத்துப் பார்த்து 'பாகுமானக் கோழி பந்தல்ல முட்டை போடுமாம்' என்றான் ராஜேஷ். எலேய் இப்பக் கூட ஒண்னுமில்ல ஒனிய வீட்டு வாசல்ல கொண்டுவந்து ஏறக்கிவிடச் சொல்றேன், போய்ப் படுத்துத் தூங்குடா, உசிர வாங்காத என்றார் செந்தில் மாமா. ஒரு ஃபுல், ஒரு ஹாஃப், ஒரு பியர், ஒரு ஓயின் அம்புட்துத்தான என்று உறுதி செய்து கொண்டு சுரேஷும் ராஜேஷும் உள்ளே சென்று வாங்கி வந்தனர். பக்கத்துக் கடையில் தேவையான நொருக்குகளை வாங்கிய பின் மீண்டும் தாறுமாறாக ஓடத் தொடங்கியது ஆட்டோ.
இப்படி வண்டி ஒட்டி ஊரு வாய்ல விழுந்து தான்டா சாகப் போற நீயீ என மாரிஷ் சொல்ல நாஞ்சாகுறதுல ஒனக்கு அம்புட்டு வருத்தமாடா பிள்ள மகனே என ராஜேஷ் கேட்க, போட ங்கோத்தாளக் கட்ட , நீயெல்லாம் செத்தேனு வச்சுக்க அப்டியே அப்பா வீரபாண்டி திருவிழால தீச்சட்டி எடுத்து ஆடுவேன்டி என்று அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டே வர வண்டி சாலை காளியம்மன் கோவிலைக் கடந்து போடி-தேனி சாலையில் உள்ள குளத்தை அடைந்தது.
மணி 10.20, அன்று பௌர்ணமி. அந்த முழு நிலவும் குளத்தில் அதன் பிம்பமும், கொட்டிக்கொண்டிருந்த பனியும், அமைதியான சூழலும் மிகவும் ரம்மியமாக இருந்தது. சரக்கடிக்க மிகச் சரியான இடமும் நேரமும் அதுவாகத்தான் இருக்க முடியும்.
வட்டமாக அமர்ந்து வாங்கிவந்ததை எல்லாம் நடுவில் வைத்தோம். திண்டுக்கல் துலுக்கய்ங்க என்னைக்கு ஓனிய நொருக்கப் போறாய்ங்கனு தெரியல, ஆனா நொருக்குறது உறுதி என்று ராஜேஷைப் பார்த்து சொன்னான் மாரிஷ். எதுக்குடா அப்டிச் சொல்ற என்று கேட்டார் செந்தில். ஆமா பிறகு மாசாமாசம் ரெண்டு நாள் அக்கா வீட்டுக்குப் போற வென்ன அங்கப் பக்கத்து வீட்டுப் பிள்ளைக்கு ரூட்டக் குடுத்துக்கிருக்கியான். அவ துலுக்கச்சி, பள்ளிக்கூடத்துக்குப் போற சின்னப் பிள்ளை அது, சும்மாவா விடுவாய்ங்க தெரிஞ்சா. இவன ஒன் நாட் ஏய்ட்-ல அள்ளிப் போடப் போறாய்ங்க பாரு என்றான் மாரிஷ். ஆமா நேத்துத்தேன் பெரியாஸ்ப்பத்திரில பிறந்துச்சு, சின்னப் பிள்ளையாம்ல, இவருதேன் வந்துப் பாத்தாரு, எத்தந்த்தண்டி இருக்கும் தெரியுமா அவளுக்கு, ஊத்துறா வென்ன, கோளாறு மயிரு சொல்றாராம் கோளாறு என ராஜேஷ் தன் செயலை நியாயப்படுத்திக் கொள்ள எல்லோருக்கும் சரக்கை ஊற்றினான் சுரேஷ். நான் எனக்கு 50 மில்லி ஓயினுடன் பீரைக் கலந்து கொண்டேன், அது ஒருவிதக் காக்டெய்ல்.
சியர்ஸ் சொல்லி கடகடவென முதல் ரவண்டை குடித்து முடித்தோம். ஆளுக்கொரு சிகரெட்டை புகைக்கத் தொடங்கினோம். சரி எண்ணான்டு சொல்றா, நீதேன் பேசணும்னு சொன்னேல என்று சுரேஷைப் பார்த்துக் கேட்டார் செந்தில். அதேன் மாமா, அந்தப் பிள்ளைக்கு பூ வைக்க வர்றாய்ங்கலாம் இன்னும் ரெண்டு நாள்ல. அது என்னா சொல்லுதுனா, நான் வந்திடுரேன் கல்யாணம் பன்னிக்கேங்குது. எனக்கு ஒரு பக்கம் அவலயும் விட முடியல வீட்டுச் சூழ்நில அது பெரிய பஞ்சாயத்து, என்னா செய்றதுனே தெரியல எனக்கு என்றான் சுரேஷ்.
அந்தப் பிள்ள காலேஜ் தானடா படிக்குது, படிச்சு முடிக்கச் சொல்லு. அதுக்குள்ள நீயும் சாம்பாரிச்சிக்க என்றேன் நான். இல்ல பங்காளி அதெல்லாம் ஆயிரந்தடவ சொல்லிப் பாத்துட்டேன். அவ ஒரே வீம்ப இருக்கா என்றான்.
மாரிஷ் எல்லோருக்கும் இரண்டாவது ரவண்டை ஊற்றிக் கொண்டே இப்படிக் கேட்டான். நீ வாங்குற மூனாயிரத்தி ஐந்நூறு ஓவா சம்பளத்துல எப்பிடிரா குடும்பம் நடத்தப் போற என்றான். அவ முப்பதாயிரம் காசு வெச்சிருக்கேன் பதினஞ்சு பவுன் நகை போட்டிருக்கேன் எல்லாத்தயும் எடுத்துக்கு வர்றேன் அத வச்சு பொழப்பு நடத்திக்கலாம்ங்றா என்றான் சுரேஷ்..
ஒக்காபுண்ட நம்மளுக்கு இப்படி ஒரு பிள்ள அமய மாட்டிங்குதே வாடி ராசாத்தி-னு கூப்டுக்கு ஓடியே போய்ருவேன் என்று மாரிஷ் சொல்ல சரக்கு வேஸ்டாப் போனாலும் பரவால்ல-னு மண்டேல ஓட்ரே அடி அடிக்கப்போறேன் பாரு என்றான் ராஜேஷ்.
இரண்டாவது ரவுண்ட் குடித்து முடித்தோம்.
கொஞ்ச நாள் பொறுமையா இருக்கச் சொல்லிப் பாரு, கேட்களனா போடி மயிருனு வந்துக்கிட்டே இரு, வேற என்ன செய்ய முடியும் என்றான் ராஜேஷ். அவள அப்படியெல்லாம் விட்டு வர முடியாதுடா, நீ வேற..அவ அம்புட்டு வெறியா இருக்கா என்றான் சுரேஷ்.
எம்புட்டு வெறியா இருக்கா? சும்மா ரூட்ட குடுக்காதே. அதும் கோயம்பத்தூர்ல காலேஜ் படிக்கிறா. அதெல்லாம் அவ ஈஸீயா மறந்திடுவாடா என்றார் செந்தில்.
அய்யோ மாமா...புரியாம பேசாத மாமா, அவ அப்படியெல்லாம் இல்ல மாமா. வெட்கத்த விட்டுச் சொல்றேன் மாமா, அவ வீட்டில ரெண்டு நாள் தங்கி இருந்தேன் மாமா, சுரேஷ்-னு காம்பஸ வச்சு அவ தொடைல எழுதிருக்க மாமா, பேன்ட்ட கழட்டி காட்டுனா மாமா. அவ மத்தவ மாதிரிலாம் இல்ல மாமா என்று சொல்லி முடிக்க அவன் கண்களிலிருந்து லேசாக கண்ணீர் வழிய ஆரம்பித்துத்த்து.
மூன்றாவது ரவுண்ட், என்னுதய ஓயின் காலி, கொஞ்சம் பியர் மட்டும் இருந்தது. எல்லோரும் கொஞ்சம் போதயில் இருந்தோம். நொருக்குகளை தின்று கொண்டு அமைதியாக இருந்தோம்.
அவக்கூட படிக்கிற ஒரு பொன்னு போன் போட்டு அழுகுது, திவ்யாவ கூட்டிக்கிட்டுப் போங்க, அவ பாவம் உங்கள ரொம்ப லவ் பண்றா, அவக்கூட சின்ன வயசுல இருந்து இருக்கேன். இப்படி அவ அழுது பாத்ததில்ல, முடிஞ்சளாவு சீக்கிரம் கூட்டிக்கிட்டுப் போங்க-னு சொல்லுது என்றான் சுரேஷ்.
சரிடா, அடுத்த வாரம் அந்தப் பிள்ளயை கூப்பிட்டு வாடா. நான் கல்யாணம் பன்னி வைக்கிறேன், என் பொண்டாட்டிகிட்ட பேசி ஒரு அமௌன்ட் வாங்குறேன். ஒனக்கு ஒரு வீடு பாத்து ஃபர்ஸ்ட் ரெண்டு மாசத்துக்கு தேவையான வீட்டுச் சாமான்லாம் நான் வாங்கிப் போடுறேன். ஆனா அதுக்கு அப்றோம் நீ ஒஞ்சம்பாத்தியத்துல அந்தப் பிள்ளய வச்சு நல்ல படியா வச்சு காப்பாத்த முடியுமா ?என்று கேட்டார் செந்தில்.
லேசாக அழுது கொண்டிருந்த சுரேஷ் கொஞ்சம் அதிகமாக தேம்பி அழ ஆரம்பித்தான்.
சொல்றா? அதுக்கு அப்றோம் ஒன்னால அந்தப் பிள்ள கூட நல்ல வாழ முடியுமா? முடியும்னாச் சொல்லு எது வந்தாலும் நான் பாத்துக்கிறேன் என்று செந்தில் கேட்க
நீ என்ன வாங்கிக் கொடுத்து என்னா மாமா என்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான் சுரேஷ்.
எல்லாம் முடிஞ்சு போச்சு மாமா...மத்தியானம் 12 மணிக்கே செத்துப் போய்ட்டா மாமா..ஆய்யையோ...திவ்யா என்று உரத்க் குரலில் கத்திக் கொண்டு நெஞ்சில் அடித்து ஓவென அழ ஆரம்பித்தான்.
அவன் திடீரென்று அப்படி சொன்னதும் எங்களுக்கு என்ன பேசுவது என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டோம்.
கடைசியா காலைல எட்டு மணிக்கு "இனிமேல் நீ நல்ல இருப்படா"-னு சொல்லிட்டு கட் பண்னிட்டா, மத்தியானம் அந்தப் பிள்ளை போன் போட்டு திவ்யா ரோக்கர குடிச்சு செத்துப் போய்ட்டா, நீங்க இங்க வராதீங்க-னு அழுகுது. அவங்க வீட்டுக்கு போன் போட்டோ கே...மா..னு அழுகுற சத்தம் கேட்குது.
தரையில் படுத்து திவ்யா.. திவ்யா.. என்று புரண்டதழுது கொண்டிருந்தான்.
தொண்டை கவ்வ கண்களில் கண்ணீர் மிதந்து கொண்டிருந்தது எனக்கு. மாரிஷும் ராஜேஷும் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு அழுதனர்.
ஏலே கருவாயா இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்குடா-னு விடிய விடிய பேசுவாளே, தலமேட்லயே போனை வச்சு படுப்பேனே, இனிமேல் யாரு கூட நான் அப்படிப் பேசப் போறேன்.... திடீரென சட்டையில் வைத்திருந்த அவன் கைப்பேசியை எடுத்து குளத்தில் வீசினான் சுரேஷ்.
நான் அவன் கையைப் பிடித்தேன். என் கையை அவன் இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு பங்காளி இது நாலு பேருக்கு தெரிஞ்ச்சினா ஊருக்குள்ள எனிய பொன்டுகப் பயன்ல சொல்லுவாய்ங்க.. ஒரு பொன்டுகப் பொழப்பு நான் பொழைக்கணுமா, நாஞ்ச் சாகப்போறேன் பங்காளி என்று என் கையைப் பிடித்துக் கதறினான்.
திவ்யா நான் வந்திடுரேன், என்ன மயிதுக்குளா எங்கூட படுத்த...கடைசி வரைக்கும் கூடவே இருப்பேனு சொல்லி நீதேன் எனிய ஏமாத்திட்ட..கொண்டி மகளே இப்படி அனாதையா விட்டுப் போய்டியேடி....
நான் இல்லைனாக் கூட வேற எவங்கூடயாவது வாழ்ந்திருக்கலாம்ல…நீ பெரிய யோக்கியச்சி என்கூட படுத்துடு இன்னொறுத்தன கல்யாணம் பண்ண மாட்டையாக்கும்…இப்ப வேதனைய மட்டும் எனக்கு குடுத்துட்டு நீ நிம்மதியா போய்ட்டைல...
அவள நான் கொண்டுவிட்டேனே பங்காளி...ஒரு கொலகார பயலா இனி ஓவோவொறு நாளும் என்னால வாழ முடியுமா…கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம்ல.. ஒரு சின்னப் பிள்ள மாதிரி ரோட்டக் கடக்கும் போது கூட என்னோட விரல பிடிச்சு நடப்பாலே, அங்க தனியா போய் என்ன செய்வ…
இல்லாத திவ்யாவிடம் கேள்விகள் கேட்டு கதறிக்கொண்டிருந்தான்.
குளத்தில் அனாதையாக மிதந்து கொண்டிருந்தது அந்த அழகான பௌர்ணமி நிலவு.
